திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சப்-டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த டி. பாண்டீஸ்வரி ஆரணி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 27) டி. பாண்டீஸ்வரி புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பாண்டீஸ்வரி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில பயிற்சி டிஎஸ்பியாக பணியாற்றி, முதன்முறையாக ஆரணிக்கு டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பிக்கு ஆரணி சப்-டிவிஷனுக்குட்பட்ட ஆரணி டவுன் தாலுகா, கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.