சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு யாத்திரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ராமகிருஷ்ணா பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் புயல், மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மெக்கா, மதீனா யாத்திரைகளுக்கு தமிழக அரசு நிதி வழங்குவது போல, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் ஐயப்ப பக்தர்களுக்கு யாத்திரை நிதியுதவி வழங்க வேண்டும். சபரிமலையில் கர்நாடக பவன், ஆந்திர பவன் உள்ளதைப் போல, தமிழ்நாடு பவன் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் 2026-இல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றார். முன்னதாக, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொதுச் செயலராக தீபக்கை நியமனம் செய்தார்.