திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) தீபத் திருவிழாவுக்கான காவல் தெய்வங்களின் வழிபாடு தொடங்க உள்ளது.
இந்த வழிபாட்டுக்குப் பிறகே நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கி விடும்.எனவே, திருவண்ணாமலை நகரில் ஆட்டோக்களை முறைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்டோக்களுக்கு நிகழாண்டு க்யூ. ஆர். கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த க்யூ. ஆர்.
கோட்டை ஸ கேன் செய்தால் ஆட்டோ ஓட்டுநரின் பெயர், முகவரி, ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமையில் அலுவலகத்தில், ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.முதுநிலை வாகன ஆய்வாளர் பெரியசாமி 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கான ஆவணங்களை சரிபார்த்தார்.
இந்தப் பணி டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும். பணிகள் நிறைவடைந்த பிறகு க்யூ.ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.