திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், உதவி ஆய்வாளர்கள் ஷாபுதீன், குபேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டு, கஸ்தம்பாடி கிராமத்தில் அன்பழகன் மகன் கோபி (38) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டு ஒன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல, கூடலூர் கிராமத்தில் சேகர்(63) என்பவருடைய பெட்டிக் கடையில் 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், களம்பூர் பகுதியில் தயாளன் மகன் திலீப்குமார்(25) என்பவரின் பெட்டிக் கடையில் 3 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். 3 பேர் மீதும் காவல் உதவி ஆய்வாளர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்