நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவத்திபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஆ. மோகனவேல் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையர் வி. எல். எஸ். கீதா முன்னிலை வகித்தார். 27 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சியில்,நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் உள்பட 18 உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 3-ஆவது வார்டு உறுப்பினர் ரமேஷ் திடீரென எழுந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவில்லை, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் போது நகர்மன்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசிப்பதில்லை, மக்களுக்கான தேவைகளை நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
அதனால்,நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் எனக் கூறி, அதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் முன்னிலையில் நகர்மன்றத் தலைவரிடம் கொடுத்து விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 7-ஆவது வார்டுஉறுப்பினர் பேபி ராணி, 15-ஆவது வார்டுஉறுப்பினர் குல்சார், 16-ஆவது வார்டுஉறுப்பினர் ராஜலட்சுமி, 17-ஆவது வார்டுஉறுப்பினர் மகாலட்சுமி, 24-ஆவது வார்டுஉறுப்பினர் விஜயலட்சுமி,1-ஆவது வார்டுஉறுப்பினர் சரஸ்வதி, 26-ஆவது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர்தங்களது ராஜிநாமா கடிதங்களை கொடுத்து விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.