திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன், வள்ளியம்மாள், அம்மாகண்ணு, லட்சுமி, கன்னியம்மாள், சின்னபொண்ணு ஆகிய 6 பேருக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கடந்த 2020-ஆம் ஆண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டதாம். ஆனால் இதுவரை 6 வீடுகளுக்கும் பட்டா வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து பட்டா வழங்கக் கோரி அந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.