திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி அருகே டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பாமக மாநில கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, மாநாடு நடைபெறும் இடத்தை மாவட்டச் செயலர்கள் ஏந்தல் பெ. பக்தவத்சலம், இல. பாண்டியன் மற்றும் நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதையடுத்து, மாநாட்டுக்கு வரும் உழவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே. மணி கூறுகையில், உழவர் பேரியக்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான உழவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல், பாமக நிறுவனர் ச. ராமதாஸ், மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு வருபவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றார். ஆய்வின்போது, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் அ.வே. பிரசாத், மாவட்ட அமைப்புச் செயலர் கே.ஆர். முருகன், பொருளாளர் சௌ. வீரம்மாள், மாநில மகளிரணி நிர்வாகி கஸ்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.