திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்பென்னாத்தூர் எஸ்எஸ்ஐ முத்து மற்றும் விஏஓ வெங்கடாஜலபதி ஆகியோர் திருவண்ணாமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இர ந்து சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்கரபாணி மகன் மணிகண்டன்(29) என்பது தெரியவந்தது. மேலும், குடிப்பழக்கம் உடையவர் என்பதும், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டன் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தானா? அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.