பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. உள்மாவட்டமான திருவண்ணாமலையும் பெஞ்சல் புயலுக்கு தப்பவில்லை. அங்கும் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மணி நேரத்தில் கனமழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் அங்குள்ள சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது.அனைத்து சாலைகளையும் மூழ்கடித்த வண்ணம் வெள்ளம் செல்கிறது.
இந் நிலையில், மழை வெள்ள பாதிப்பில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீடும் தப்பவில்லை. வெள்ள நீரின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவர் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.
கலெக்டர் வீட்டின் அருகே உள்ள வேங்கிகால் ஏரி நிரம்பி வழிகிறது. அங்கு இருந்து வெளியேறும் நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. தொடர் மழை காரணமாக, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து, வெள்ள நீர் உள்ளே சென்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் மக்கள் வீடுகளில் இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.