ஃபெஞ்சல் புயல் தாக்குதலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. ஜவ்வாது மலையிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து செய்யாறு, செண்பகத்தோப்பு அணையில் இருந்து கமண்டல நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.செய்யாற்றின் குறுக்கே ஆவணியாபுரம் பகுதியில் கட்டப பட்டுள்ள அணைக்கட்டு திறக்கப்படவில்லை. இதனால், அணைக்கட்டு கரை பகுதியில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக தண்ணீர் வெளியேறி, வந்தவாசி -ஆரணி சாலையை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதும், வந்தவாசி – ஆரணி சாலையில் மழைநீர் வடித்து போக்குவரத்து சீரானது. மேலும் ஆரணி அருகே முனுகப்பட்டு என்ற இடத்தில் செய்யாற்றுடன் கமண்டல நாக நதியும் இணைந்ததால், செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.செய்யாற்றில் விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றுள்ளது.
செய்யாறு மற்றும் ஆவணியாபுரம் அணைக்கட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண மக்கள் திரண்டனர். நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தி காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.