திருவண்ணாமலையில் வ. உ. சி நகரில் வீடு புதைந்ததில், 5 குழந்தைகள் உள்பட 7 சிக்கினர். இவர்களை மீட்க 18 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களின் அடையாளம் தெரிந்தது. ராஜ்குமார் – மீனா தம்பதி, அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் மூன்று பேர் என மொத்தம் 7 பேரும் சிக்கியிருந்தனர்.சிறுவர்கள் 5 பேரும் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மலையில் இருந்து மழை நீரும் பாறசையும் உருண்டு வந்ததை பார்த்துள்ளனர். உடனே அச்சம் அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போதுதான் வீட்டையும் மண் மூடியுள்ளது. மண்சரிவு, பாறைகள், வீடுகளின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒவ்வொருவரின் உடலாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு இருந்தவர்களை நிலைகுலைய வைத்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 7 பேரும் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்ததாக கூறியுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.