ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக தொடர் மழை பெய்தது. இதில் ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகள் நிரம்பி ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தயாரான நெல் பயிரில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் வந்தவாசி பகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கராஜபுரம், கொட்டை, குறிப்பேடு, ஓசூர் என பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் பெருமளவு மழைநீர் தேங்கியது.இதனால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெரும் இழப்பு ஏற்படும். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.