உளுந்தூர்பேட்டை அருகே குளத்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக சாலை மறியல் போராட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா எம். குன்னத்தூர் கிராமத்தில் தொடர் மழை பெய்ததால் அங்குள்ள குளத்தில் நீர் நிரம்பியது.
இதனால் குளத்து நீர் வெளியேறி மக்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என குளத்தின் அருகில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். எனவே தொடரும் மழையால் குளத்தின் கரை உடைந்து பாதிப்பு ஏற்படுவதற்கு முன் குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று மதியம் 3 மணியளவில் கம்யூ., நிர்வாகி ஹரி தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் உளுந்தூர் பேட்டை- திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதன் பேரில் மதியம் 3.50 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.