அரகண்டநல்லூர் பகுதியில் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் வெளியேறியதால் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.தென்பெண்ணை ஆற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக திருக்கோவிலூர் அணைக்கட்டின் வலது புறப்பகுதியான அணைக்கரை நேற்று காலை 8:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது.
இதிலிருந்து வெளியேறிய வெள்ள நீர் ஏமப்பேர், அருமலை, கீழக்கொண்டுர் காக்காகுப்பம் என பல கிராமங்களில் உள் புகுந்தது. விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன் கால்நடைகளும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது.அதேபோல் கரையின் இடது புறமான ஆராமேடு, மெய்யூர் என பல கிராமங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெரு, கீழையூர் பள்ளத் தெரு, பம்பவுஸ் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்த 500க்கும் மேற்பட்டோரை நகராட்சி சேர்மன் முருகன், ஆணையர் திவ்யா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் குணா மற்றும் நகராட்சிஊழியர்கள் நேற்று அதிகாலை 3: 00 மணிக்கு வெளியேற்றி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைத்தனர்.இவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.