திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு – திண்டிவனம் இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆரணி கூட்டுச் சாலையில் இருந்து தண்டரை கால்வாய் வரை புறவழிச் சாலை இருபுறங்களும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் மழைநீர் வடிய போதிய கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் வடிய வழி இல்லாமல் அங்கே தேங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இதனால், அப்பகுதி வீடுகளில் வசித்து வருபவர்கள் வெளியில் வர முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மழைநீர் வடிய நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை வைத்து காலை கொடநகர் தேவேனரிக் குட்டைப் பகுதி அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன், காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேங்கிய மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.