சாத்தனுார் அணை 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணை திறக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து, நேராக கடலுார் கடலில் கலந்து விடும். அணையின் பாதுகாப்பு கருதி 117 அடி அதாவது 6,800 மில்லியன் கன அடி நீர் இருப்பு பராமரிக்கப்பட்டு வந்தது.
பெஞ்சல் புயல் காரணமாக அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 1ம் தேதி காலை முதல் படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டு 2ம் தேதி அதிகாலை 1.68 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், துரிஞ்சல் ஆறு, சிற்றோடைகள் என திருக்கோவிலூர் அணைக்கட்டை 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் கடந்து சென்றது. இதனால், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலமான பாகூர் பகுதியில் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் மதியம் 2.00 மணியளவில் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 68 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் சற்று தணிந்தது.
நேற்று காலை 6:00 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து 36 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்திலிருந்து விலகி, சகஜ நிலைக்கு திரும்பியது.