திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல் நேர மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர். பொன்னுசாமி பங்கேற்று, மாற்றுத் திறனாளி குழந்தைகள் இறைவனின் குழந்தைகள்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் பங்கேற்று அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை கூறினார்.
நிகழ்ச்சியில் பாரத் வித்யாலயா பள்ளி நிர்வாகி சி. காசி, சமூக ஆர்வலர் அப்துல் ரஹ்மான், ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் சிறப்பு ஆசிரியர் எமல்டா நன்றி கூறினார். அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.