கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் மதுசூதன் முன்னிலை வகித்தார். வருவாய்த் துறை, நகராட்சி, வேளாண்மை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம், பேரூராட்சி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை, முகாம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மழைநீர் வடிந்துள்ள பகுதிகள் மற்றும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளின் விபரம், நிவாரண உதவிகள் வழங்கிய விபரம், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, நிவாரண உதவி வழங்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வழங்கும் ஆலோசனைகளை உடனுக்குடன் செயல்படுத்த துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.