தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தமிழக அணி வீராங்கனைகளுக்கு சின்னசேலம் அடுத்த இதயா மகளிர் கல்லூரி வளாகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 18 பேர் கொண்ட தமிழக கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு சி.இ.ஓ., கார்த்திகா சீருடை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், இதயா மகளிர் பொறியியல் கல்லூரி செயலாளர் சோபியா, உடற்கல்வி இயக்குனர் ஹரிகரன், அணியின் பயிற்சியாளர் லோகநாதன், அணி மேலாளர் சம்சாத்பேகம், உடற்கல்வி ஆசிரியர்கள் சாமிதுரை, பாலமுருகன், ஆக்னஸ்மேரி, பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.