திருவண்ணாமலையில் மகா தீப மலையின் அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. அப்போது, மலையில் ஏற்பட்ட மண் சரிவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த வீடுகளில் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் (32), இவரது மனைவி மீனா (26), தம்பதியின் மகன் கௌதம் (9), மகள் இனியா (7), இதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகள் மகா (12), மஞ்சுநாதன் மகள் வினோதினி (14), சரவணன் மகள் ரம்யா (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 7 பேரது குடும்பங்களுக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவியை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.