திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் இருக்கும் கட்டடத்தில் நெருக்கமாக வகுப்பறைகள் பிரிக்கப்பட்டு பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்டத்தில் பெய்த பருவமழை, மற்றும் புயல் மழையால் பள்ளிக் கட்டடத்தின் மீது மழைநீர் தேங்கி வகுப்பறையில் தண்ணீர் கசிவதால், மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், கட்டடம் இடிந்து விழும் என்ற அச்சம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் பள்ளிக் கட்டடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், கட்டடம் பழுது நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் மாணவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், விரைவில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன் ஆசிரியர்களிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும் தெரிவித்தார்.