திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குட்டி ஆர். வெங்கடேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் எஸ். கே. ரத்தினகுமார், கிழக்கு மாவட்டச் செயலர் வி. கே. சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி, கட்சியின் கொடியேற்றுதல் சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தினர். முன்னதாக திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆரணியை அடுத்த அரையாளம் சி. பிரபாகரன், ஆர். சின்னையன், போளூர் எம். நடராஜன், கே. சிவகுமார், எஸ். பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.