திருவண்ணாமலை, கலசப்பாக்கம் அடுத்த எம். என். பாளையம் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகன் ஜெயபால் (வயது 32). இவர்கள் இருவரும் கடந்த 3.11.2009-இல் இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரமேஷ் என்பவரை கொல்ல முயன்றனர்.
மேலும், அவரது மனைவி, மகள்களை தாக்கினர். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வம், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர். திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்தது.
இதில், செல்வம், ஜெயபால் ஆகியோருக்கு தலா 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் தலா ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி டி. ஜெயசூர்யா தீர்ப்பளித்தார். இதையடுத்து, தந்தை, மகனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.