திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கூலித் தொழிலாளி ராஜ்குமார் (32), இவரது மனைவி மீனா (26), மகன் கௌதம் (9), மகள் இனியா (7), ராஜ்குமாரின் உறவினர்கள் சுரேஷ் மகள் மகா (12), மஞ்சுநாதன் மகள் வினோதினி (14), சரவணன் மகள் ரம்யா (12) ஆகியோர் மண் சரிவில் சிக்கி இறந்தனர்.
மண் சரிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரை நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப் பெருந்தகை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார்.
பிறகு திருவண்ணாமலை நகராட்சி அமராவதி முருகையன் உயர்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறி, நல உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார், திருவண்ணாமலை நகரத் தலைவர் என். வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.