ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் ரிஷிவந்தியம் பகுதியில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.இதையொட்டி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது. வேளாண் அலுவலர் புஷ்பவள்ளி மேற்பார்வையில், துணை அலுவலர் செந்தில குமார், உதவி வேளாண் அலுவலர்கள் அப்பாஸ், வேலு, சேகர், வினோத்குமார், தொழில்நுட்ப மேலாளர்கள் சாட்டர்ஜி, சுவனேஷ்வர் ஆகியோர் பயிர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
‘ட்ரோன்’ மூலம் பாசார், பேரால், சாத்தப்புத்தூர், பெரியக்கொள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில், உளுந்து, மக்காச்சோளம், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது தெரிந்தது. கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடிந்ததும் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.