கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. மேலும் பாப்பாங்கால் ஓடை வழியாகவும் அணைக்கு நீர் வரத்து ஏற்படுகிறது.
மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடி (736.96 மில்லியன் கன அடி) ஆகும். இந்த அணையை நம்பி 10 கிராமங்களைச் சேர்ந்த 5,493 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கோமுகி அணை மலை அடிவாரத்தில் இருப்பதால், பருவ மழைக் காலங்களில் அந்த அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும். ஆனால் மணிமுக்தா அணை தொடர் மழை பெய்தால் மட்டுமே நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது.
கோமுகி அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மணிமுக்தா அணையில் தண்ணீர் தேக்கம் இன்றி காணப்பட்டது. இதனால் மணிமுக்தா அணையை நம்பியிருந்த விவசாயிகள் கவலையில் இருந்தனர். தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.