திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தலைமை நிலஅளவையர் சரவணன் தலைமை வகித்தார். நிலஅளவையர்கள் பிரசாத், அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணியில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது, சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப் பணியாளர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், களப் பணியாளர்களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யவேண்டும்,கூடுதல் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும் இயக்குநருக்கு மாற்றுவதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும், புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்புவதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.