கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு லட்சுமி, தங்கபாபு என்ற 2 மனைவிகள் உள்ளனர். லட்சுமிக்கு தமிழ்செல்வி, 85; என்ற மகளும், தங்கபாபுவுக்கு காமராஜ் என்ற மகனும் உள்ளனர்.தங்கவேல் உயிருடன் இருந்தபோது, இரு மனைவிகளுக்கும் நிலத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் தங்கவேல் இறந்து விட்டார்.இந்நிலையில், லட்சுமியின் மகள் தமிழ்ச்செல்வி, 2 ஏக்கர் நிலத்தை மகன் மயில்முருகன் மீது உயில் எழுதி வைப்பதற்காக நேற்று உளுந்துார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.இதனை அறிந்த அங்கு வந்த தங்கபாபுவின் மகன்கள் பாண்டியன், பாபு ஆகியோர், அலுவலகத்தில் இருந்த மூதாட்டி தமிழச்செல்வியிடம், நிலத்தை எப்படி பத்திரப்பதிவு செய்யலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதில் தமிழ்ச்செல்வி காயமடைந்தார். தொடர்ந்து, சார் பதிவாளர் தாமோதரனிடம், பத்திரப்பதிவு செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பத்திரப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டது.தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சென்று, அலுவலகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி கதவை மூடினர். அப்போது சார் பதிவாளர் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.