கடலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கி வருவதன் மூலம் இந்த சமுதாயத்திற்கான தனது உறுதியான பங்களிப்பை என்எல்சிஐஎல் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடர் கால நெருக்கடிக்கு உடனடியாக உதவிடும் வகையில், நிறுவனம் தனது நெய்வேலி சுரங்கங்களின் தொழில் துறை உணவகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருவதோடு, தேவைப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகளையும், ஆறுதலையும் அளித்து வருகிறது.
நெய்வேலி சுரங்கம்-1, 1அ மற்றும் சுரங்கம்-2 ஆகிய தொழிலக உணவகங்கள் (கேண்டீன்கள்) மூலம், உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, 14.12.2024 முதல் 16.12.2024 வரை மூன்று நாட்கள் முறையே 30 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ஆக மொத்தம் இதுவரை 55 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த உணவுப் பொட்டலங்கள் அனைத்தும், என்எல்சிஐஎல் பணியாளர்களால், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு, என்எல்சிஐஎல் லாரிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.