திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, தினமும் 63 நாயன்மார்கள் வீதியுலா வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 13-ஆம் தேதி பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, திருவண்ணாமலை, அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீசண்டிகேஸ்வரர் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து ரிஷப வாகனத்தில் புறப்பட்ட ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்து நள்ளிரவில் மீண்டும் நிலையை அடைந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்துடன், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர்கள் உ. மீனாட்சி சுந்தரம், டி. வி. எஸ். ராசாராம், கு. கோமதி குணசேகரன், சினம் இராம. பெருமாள், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.