
இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பாஞ்சாங்குளம் கண்மாயில் கடந்த 30.7.2014ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையில் கொலை செய்யப் பட்டது மணிமேகலை (வயது 19) என்ற இளம் பெண் என்றும், அவரை கொலை செய்தது கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது29) என்பதும் தெரியவந்தது.
ஏற்கனவே திருமணமான பாலகிருஷ்ணனும், மணிமேகலையும் காதலித்து வந்தனர். இதனால் மணிமேகலை தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பாலகிருஷ்ணனை வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாலகிருஷ்ணன் திருமணத்திற்கு மறுத்து விட்டார். இந்நிலையில் மணிமேகலையை, பாஞ்சாங்குளம் கண்மாய்க்கு அழைத்துச்சென்று அங்கு அவரை பாலகிருஷ்ணன் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ராஜவேலு வழக்கை விசாரணை நடத்தி இளம் பெண்ணை கொலை செய்த பால கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.