சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான கரோனா வைரஸ் சந்தைகளில் விலங்குகளிடம் இருந்து உருவானதா அல்லது சீனாவின் சோதனைக் கூடங்களில் கரோனா வைரஸைத் தவறாகக் கையாண்டதால் மக்களுக்குப் பரவியதா என்பது குறித்து விசாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் ஆய்வகங்களில் இருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று வரும் கருத்துகளை, செய்திகளை முற்றிலும் நிராகரித்து விடமுடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் ஹூபே மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. சீனாவில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் தெரிவித்தது. மருத்துவர்களும் அவ்வாறே தெரிவித்து வருகிறார்கள்.