கரோனா தொற்று மொத்தமாக மக்களை முடக்கி போட்டாலும் அதனால் சில நன்மைகளும் விளைந்துள்ளன. அதில் ஒன்று சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, திருட்டுக்குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் இதனால் பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமல், வருமானமின்றி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்காமல் எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை வேறு வழியில்லாமல் பொதுமக்கள் சகித்துக்கொள்கின்றனர்.
அதே வேளையில் கரோனாவால் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளது என்பதே. கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் இதைக்குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளும் கரோனாவால் விளைகிறது.
அனைவரும் வீட்டில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஓய்வில் இருப்பதால் குடும்ப உறவு மேம்பட்டுள்ளது.
மது பழக்கத்தால் குடும்ப வன்முறை, பொருளாதார பாதிப்பு, உடல் நலன் பாதிப்பு போன்றவை இக்காலக்கட்டத்தில் குறைந்துள்ளது. மது அருந்தும் பழக்கத்தை கைவிட இதை ஒரு வாய்ப்பாகவே அனைவரும் முயல வேண்டும் என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸாருக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை தீர்ந்துள்ளது. அது குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக வெகு கணிசமாக குறைந்துள்ளது என்பதே. 79 சதவீதம் குற்ற எண்ணிக்கைகள் குறைந்துள்ளது என சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டைவிட்டு கண்டபடி வெளியில் வாகனங்களில் சுற்றுவது போக்குவரத்து நெரிசல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து காரணமாக ஏற்படும் காயங்கள் எண்ணிக்கை சதவீதமும் காய வழக்குகள் எண்ணிக்கை 81 சதவீதமும், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வழக்குகள் எண்ணிக்கை 75 சதவீதமும் குறைந்துள்ளது.
மது போன்ற பானங்கள் அருந்துவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு பழி தீர்ப்பது, குடும்ப வன்முறை, திடீர் கோபம் சச்சரவு காரணமாக மோதல், ஆதாய கொலை போன்ற பல காரணங்களால் பதிவாகும் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளது.
கடைகள், வணிக நிறுவனங்கள், நகைகடைகள், வங்கிகள் பூட்டப்பட்டிருந்தாலும் வெளியில் வருவது தடுக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாலும், போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், வீடுகளில் மனிதர்கள் முடங்கி இருப்பதாலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கவே வாய்ப்பில்லாததால் கொள்ளை வழக்குகள் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துள்ளது.
வீடுகளில் மக்கள் எந்நேரமும் இருப்பதாலும், வணிக நிறுவனங்கள், கடைகள், பஜார்களில் போலீஸார் பாதுகாப்பு மற்றும் ஊரடங்கு இருப்பதாலும், சமூக விரோதிகள் வெளியில் நடமாடுவது குறைவு, வாகன எண்ணிக்கை குறைவு என்பதாலும் திருட்டு வழக்குகள் எண்ணிக்கையும் திருட்டுச் சம்பவம் எண்ணிக்கை 81 சதவீதம் குறைந்துள்ளது. வீடுபுகுந்து திருடுதலும் மேற்கண்ட காரணங்களால் எண்ணிக்கை 59 சதவீதம் குறைந்துள்ளது.
இதேப்போன்று வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் ஏற்கெனவே சென்னையில் உள்ள சிசிடிவி பயம் காரணமாக கணிசமாக குறைந்துள்ள நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் பெரிதாக இல்லை. மொத்தத்தில் கரோனா முடக்கியும் போட்டுள்ளது, குற்றச்செயல்களை அடக்கியும் வைத்துள்ளது.