2003 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடனான அந்த மேட்சை யாரும் மறக்க முடியாது. சயீத் அன்வர் பிரமாதமாக ஆடி சதம் எடுக்க பாகிஸ்தான் 273/7 என்று ரன்களைக் குவிக்க இந்திய அணி வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், வக்கார் யூனிசின் பந்து வீச்சில் மடிந்து விடும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியப் போட்டி அது.
ஆம் செஞ்சூரியனில் அன்று நடந்த போட்டியில் இந்திய ரசிகர்கள் டென்ஷனுடன் விரட்டலைப் பார்க்கத் தொடங்க சச்சினும், சேவாகும் வெளுத்துக் கட்டினார்கள், அதுவும் முதல் வாசிம் அக்ரம் ஓவரில் சச்சின் ஆஃப் திசையில் கவருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையே அடித்த இரண்டு பேக்ஃபுட் பஞ்ச் பவுண்டரிகளை மறக்கத்தான் முடியுமா?
சேவாக் வக்கார் யூனிஸை தேர்ட் மேனில் சிக்ஸ் அடிக்க சச்சின் டெண்டுல்கர் அக்தரை அதே திசையில் மிகப்பெரிய சிக்ஸரை அடிக்க முதல் 10 ஓவர்களிலேயே ஸ்கோர் 100 ரன்களை நெருங்கியது. சேவாக் 14 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க கயீஃப், திராவிட், யுவராஜ் சிங் பிரமாதமாக ஆட சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 98 ரன்களை அடித்து காயமடைந்த நிலையில் அக்தரின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு வெளியேறினார்.
இந்திய அணி 276/4 என்று 46வது ஓவரில் மிக அனாயசமாக வென்றதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், அதுவும் ஷோயப் அக்தரை அடித்த அந்த சிக்சர் ரசிகர்களின் மனதில் மூலப்படிவம் என்பார்களே அப்படி படிந்து விட்ட ஒரு நினைவாகும். 2011 இறுதியில் தோனி அடித்த வெற்றி சிக்சரா, அல்லது சச்சினின் இந்த அக்தர் சிக்சரா என்றால் இன்றும் வாக்கெடுப்பு வைத்தால் சச்சின் சிக்சர்தான் வெல்லும்.
இது குறித்து ஷோயப் அக்தர் கூறும்போது, “சச்சினுக்கு எதிராகப் பந்துவீசியது நல்ல அனுபவம். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவரை நான் அதிக முறை வீழ்த்தியுள்ளேன். ஆனாலும் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் செஞ்சுரியனில் நடைபெற்ற ஆட்டத்தில் என்னுடைய பந்தில் சச்சின் அடித்த சிக்ஸரை தான் அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு சிக்ஸர், 1.3 பில்லியன் கோடி மக்களைச் சந்தோஷப்படுத்தும் எனத் தெரிந்திருந்தால் ஒவ்வொரு நாளும் என் பந்தில் அவரை சிக்ஸர் அடிக்க விட்டிருப்பேன்” என ருசிகரமாகப் பதில் அளித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் மிக அனாயசமாக 53 பந்துகளில் 50 ரன்கள் அடித்து பினிஷ் செய்ததையும் மறக்க முடியாது.