கேரள முதல்வர் அனைத்தும் செயலில் காட்டுகிறார் என்றும் இங்கு அனைத்துமே விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் கஸ்தூரி சாடியுள்ளார்.
கரோனா வைரஸ் அச்சத்தால் மே 3-ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னும் அதிகப்படி நபர்களுக்கு டெஸ்ட் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்து வருகிறது.
இதனிடையே, பக்கத்து மாநிலமான கேரளாவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகப்படியான டெஸ்ட்களும் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் செயல்பாட்டுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இங்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் கரோனா தொற்று தொடர்பாக அறிக்கைப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை. முதல்வர் பினராயி விஜயன் அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு”
இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.