படப்பிடிப்பு இல்லாமல் அவதியுறும் நடிகர்களுக்கு உதவும் வகையில், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் லாரன்ஸ்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
மேலும், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், நடிகர்களுக்கு முன்னணி திரையுலப் பிரபலங்களும் உதவிகள் செய்து வருகிறார்கள். தமிழ் நடிகர்களில் முதன்மையாக 3 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளிப்பதாக லாரன்ஸ் அறிவித்தார். அதில் எந்த நிவாரணத்துக்கு எவ்வளவு என்ற பட்டியலையும் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனியாகத் தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் எனக் கொடுத்துள்ளார்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தற்போதுதான் இந்த வீடியோவைப் பார்த்தேன். இதை எனக்கு அனுப்பிய நடிகர் உதயாவுக்கு நன்றி. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், யூனியனிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் எனக்கு ஏராளமான வீடியோக்கள் வருகின்றன. தனி ஆளாக என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாராவது உதவி செய்ய விரும்பினால் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். ஒரு ரூபாய் கூட உதவிகரமாக இருக்கும். சேவையே கடவுள்”.
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.