பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைத் தொடர்ந்து கற்பதற்கதான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் தொடர்ந்து பாடம் பயிலும் வகையில் கல்வித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.செ.சுபாஷினி கூறுகையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அந்தத் தேர்வுகளைத் தள்ளி வைத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் வீட்டிலிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனிப் பயிற்சி மையங்கள் என எந்தவொரு கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியமானதாகும்.
ஏற்கெனவே 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுக்கு ஆயத்தமான நிலையில் இருந்தார்கள். தற்போது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள், பாடங்களின் முக்கிய பகுதிகள் ஆகியவற்றிற்கான வீடியோக்களை கல்வித் தொலைக்காட்சி தயாரித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை கற்றல் செயல்பாடுகளை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். கல்வி தொலைக்காட்சியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திருப்புதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
15ம் தேதி (இன்று) முதல் கல்வி தொலைக்காட்சியின் 10- ம் வகுப்பு பாடங்கள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும், தினமும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பாலிமர், சகானா தொலைக்காட்சியிலும் மாணவர்கள் கண்டு பயனடையலாம். இந்த 10-ம் வகுப்பு பாடங்களுக்கான வீடியோக்கள் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலான kalvitvofficial என்ற தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணடிக்காமல், கல்வி தொலைக்காட்சி மூலம் வீட்டிலிருந்தே பயிற்சி பெற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம் என்றார்.