தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி எப்போதும் ரசிக்கப்படுபவையாக இருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் 16 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் (2004 ஏப்ரல் 17) வெளியானது ‘கில்லி’. இந்தப் படம் காலம் கடந்து ரசிக்கப்படுவதற்குச் சான்றாக அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டபோது சமூக ஊடகங்களில் இந்தப் படத்தைப் பாராட்டும் பதிவுகள் அதிகரித்தன. அப்பதிவுகளை எழுதிய இளைஞர்கள் பலர் படம் வெளியானபோது விவரம் அறியாத சிறுவர்களாகவோ குழந்தைகளாகவோ இருந்திருப்பார்கள்.
குடும்பங்களைக் கவர்ந்த படம்
ஏ,பி,சி என ஆல் சென்டரிலும் ஹிட்டடித்து இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் பிடித்த படமாக அமைந்தது. கோடை காலத்தில் சுற்றுலாத் தளங்களுக்கும் தீம் பார்க்குகளுக்கும் சென்றுகொண்டிருந்த குடும்பங்களைத் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்க வைத்த படம் ‘கில்லி’.
இந்தப் படம் வெளியாவதற்கு முந்தைய ஆண்டு தீபாவளிக்கு ‘திருமலை’ வெளியாகியிருந்தது. அதுவரை சில தோல்விப் படங்களால் தத்தளித்துக்கொண்டிருந்த விஜய்க்கு அந்தப் படத்தின் வெற்றி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. தவிர விஜய்யின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை வலுவாகப் பதிவு செய்தது ரமணா இயக்குநராக அறிமுகமான அந்தப் படம். அதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான ‘கில்லி’யும் பரபரப்பான ஆக்ஷன் படம்தான். ஆனால் இதில் ஆக்ஷன் மட்டுமில்லாமல். காமெடி, சென்டிமென்ட், காதல், என அனைத்தும் சிறப்பாகவும் சரிவிகிதத்திலும் அமைந்திருந்தன. அதுவே இதை அனைவருக்கும் பிடித்த படமாக்கியது. அஜித் ரசிகர்களுக்குக்கூட இந்தப் படம் பிடித்துப்போனது என்றால் மிகை