*கோழிக்கோடு, மங்களூரு விமான விபத்துக்கள் – “2 விபத்துக்களும் ஒரேமாதிரியாக உள்ளது”*
மங்களூரு விமான நிலையம் டேபிள் டாப் என்று அழைக்கப்படும் விமான நிலைய வகையை சேர்ந்தது. இத்தகைய விமான நிலையங்கள் நாட்டில் 3 தான் உள்ளன. அதில் ஒன்று மங்களூரு மற்றொன்று கோழிக் கோட்டில் உள்ளது. டேபிள் டாப் விமான நிலையம் என்பது மலை உச்சியிலோ, பீடபூமியிலோ அமைந்திருக்கும். இந்த வகையான விமான நிலையங்களை கையாளும் திறன் மற்றும் அனுபவத்துடன், அதிக நேரம் பறந்து அனுபவம் உள்ள விமானிகள் அவசியம். ஆனால் பல நேரங்களில் அனுபவம் வாய்ந்த விமானிகளையே இந்த விமான நிலையங்கள் ஏமாற்றி விடும் என கூறப்படுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றம், மழைக் காலங்களில் இத்தகைய விமான நிலையங்களில் விமானங்களை இறக்கி, ஏற்றும் போது விமானிகளின் கணக்கீடு தவறும் நிலையில், விபத்துக்கள் தவிர்க்க இயலாததாகி விடும் என்கின்றனர் நிபுணர்கள். விமானங்களை குறித்த இடத்தில் தரையிறக்காமல், முன்போ, பின்போ இறக்கும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி துபாயில் இருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் போது ஒடுதளப் பாதையை விட்டு விலகி ஓடியதால் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்ய 166 பயணிகளில் 158 பேர் உயிரிழந்தனர்.
விசாரணையில், விமானி, உரிய இடத்தில் விமானத்தில் தரையிறக்காமல் ஆயிரத்து 600 மீட்டர் தாண்டி இறக்கியதன் விளைவு, விமானம் ஓடுபாதையின் முடிவில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையமும், டேபிள் டாப் விமான நிலைய வகையை சார்ந்தது. கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மங்களூர் விமான ஓடுதளம் 2 ஆயிரத்து 400 மீட்டரும், கோழிக்கோடு விமான நிலைய ரன்வே 2 ஆயிரத்து 850 மீட்டர் நீளமும் கொண்டது. ஆனால் 3150 மீட்டர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த விமான ஓடுபதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு விபத்துக்கும் இதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.2010 ஆம் ஆண்டு மங்களூரு விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய விமானி மொத்த பயண நேரமான 2 மணி நேரம் 5 நிமிடத்தில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் குறட்டையுடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது கறுப்புப் பெட்டியில் இருந்த ரிக்கார்டரில் பதிவாகி உள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் துபாயில் இருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. அதிர்ஷ்டவசமாக சகதி மற்றும் புல்தரையில் சிக்கி விமானம் நின்றதால் அதில் பயணம் செய்த 183 பயணிகளும் பத்திரமாக உயிர்தப்பினர்.