செய்திகள்

கேரளா விமான விபத்து மீட்கபட்டது கருப்பு பெட்டி..

கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்பு..!கனமழைக்கு நடுவே, மலைப்பகுதியில் அமைந்த ஓடுதளத்தில் விமானம் இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு சென்று பள்ளத்தில் விழுந்ததால், இரண்டு துண்டுகளாகப் பிளந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தியாவில் 3 விமான நிலையங்களில் டேபிள்டாப் ரன்வே எனப்படும் விமான ஓடுதளங்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தில் மங்களூரு விமான நிலையம், கேரளத்தில் மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் அமைந்துள்ள கோழிக்கோடு விமான நிலையம் மற்றும் மிசோரமில் லெங்புய் விமான நிலையத்தில் டேபிள்டாப் ஓடுதளங்கள் அமைந்துள்ளன.பீடபூமி அல்லது மலைப் பகுதியில் விமான ரன்வே அமைக்கும்போது, ஓடுதளத்தின் விளிம்புகளில் சரிவு அல்லது பள்ளம் இருப்பதால், டேபிள்டாப் என குறிப்பிடப்படுகிறது. இதில், மங்களூரு விமான நிலையத்தில், 2010ஆம் ஆண்டில், துபாயில் இருந்து வந்த விமானம், டேபிள்டாப் ஓடுபாதையை தாண்டி சென்று மலைப்பகுதியில் கீழே சரிந்ததில் 158 பேர் உயிரிழந்தனர். இதேபோன்ற விபத்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு, கோழிக்கோடு விமானநிலையத்தில் டேபிள்டாப் விமான ஓடுபாதையில் நேற்றிரவு ஏற்பட்டது.வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 186 பேருடன் கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் Boeing 737 விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்க முயன்றது. இந்திய விமானப் படையின் முன்னாள் விமானி கேப்டன் தீபக் சேத், துணை விமானி அகிலேஷ் குமார் இருவரும் விமானத்தை இயக்கி வந்தனர். கனமழை, பலத்த காற்றுக்கு நடுவே 28ஆம் எண் ஓடுதளத்தில் இரு முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்த விமானிகள், அந்த முயற்சியில் தோல்வியடைந்தனர்.விமானம் தரையிறங்கி ஓடும் திசையில் காற்று வேகமாக வீசியதால், விமானத்தை கட்டுப்படுத்துவது சிரமம் எனக் கருதி, மூன்றாவது முயற்சியில் எதிர்திசையில் வந்து 10ஆம் எண் ஓடுதளத்தில் விமானத்தை 7.41 மணிக்கு தரையிறக்கியுள்ளனர். கடினமான முறையில் தரையிறங்கிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு சென்று, ஓடுதளத்தின் விளிம்பையும் தாண்டி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விமானம் இரண்டு துண்டுகளாக பிளந்தது.விமானம் பள்ளத்தில் விழுந்தபோது எழுந்த பெரும் சத்தத்தை கேட்டு, சுற்றுப் பகுதி மக்கள் அங்கு விரைந்துள்ளனர். சிறார்கள் இருக்கைகளின் அடியில் சிக்கி அலறிக் கொண்டிருந்த காட்சியும், பலத்த காயமடைந்தவர்களின் அலறல் சத்தமும் நெஞ்சை பதைபதைக்க வைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கால், கைகள் உடைந்து பலத்த காயத்துடன் பலர் இருந்ததாகவும், காயமடைந்தவர்களை மீட்டபோது உடைகள் ரத்தத்தில் நனைந்துவிட்டதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.மீட்புப் படையும் ஆம்புலன்சும் வருவதற்குள்ளேயே சுற்றுப் பகுதி மக்கள் பலரை கார்கள் மூலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 சிறார்கள் உள்ளிட்ட 180 பயணிகள், 2 விமானிகள், 4 விமானப் பணியாளர்கள் விமானத்தில் இருந்துள்ளனர். இதில், 2 விமானிகள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துவிட்டனர்.149 பேர் காயமடைந்ததில், 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 22 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விமானி சமயோசிதமாகவும், துணிச்சலுடனும் செயல்பட்டதாலும், சுற்றுப் பகுதி மக்கள் விரைந்து உதவிக்கு வந்ததாலும் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதோடு, விமானம் தீப்பிடித்து எரிந்திருக்கக் கூடிய சாத்தியமும் தவிர்க்கப்பட்டதாக விபத்தில் உயிருடன் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சம்பவ இடத்திற்கு சென்று, விமான விபத்துகள் விசாரணை ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். விமானிகளின் கடைசிநேர உரையாடல் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டி, விமானம் எப்படி இயக்கப்பட்டது என்பதை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்திருக்கும் கருவி ஆகியவற்றை விமானத்தில் இருந்து மீட்டனர்.இந்த விபத்து குறித்து, விமானப் போக்குவரத்து இயக்ககம், விமான பாதுகாப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழைக்கு நடுவே, மலைப்பகுதியில் அமைந்த ஓடுதளத்தில் இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு சென்று பள்ளத்தில் விழுந்ததால், விமானம் இரண்டு துண்டுகளாகப் பிளந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button