திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் மண் பானைகளை விரும்பி வாங்குவார்கள். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இங்கு தயாரிக்கப்பட்ட மண் பானைகளும் விற்க முடியாமல் முடங்கி கிடக்கின்றன.பொதுவாக மண்பானையில் இருக்கும் தண்ணீர் கெட்டுப்போகாது. மண் பானை தண்ணீரை குடித்தால் நோய்கள் வராது. மண்பானையில் கிருமிகள் தேங்காது. எனவே தற்போதுள்ள கொரோனா பிரச்சினையிலும் கூட மண்பானை சமையலை பலர் விரும்புகிறார்கள்.
இப்பகுதியில் உற்பத்தியாகும் மண் பானைகள் திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, கரூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மாதம் 5 லோடு வீதம் அனுப்பப்படுவது வழக்கம்.
தற்போது கொரோனா பிரச்சினையால் மண்பானை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. 10 லோடு அளவுக்கான மண்பானைகள் வீடுகளில் தேக்கம் அடைந்துள்ளன.இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நத்தம் செய்தியாளர் வசந்த்