தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 30 வயது ஆண், அவரது 28 வயது மனைவி, இரண்டு வயது கைக்குழந்தை ஆகியோர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் இந்திராவீதி பகுதிக்கு வந்தனர். அந்தியூர் வீட்டிற்கு வரும்போதே, ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இதேபோல், அந்தியூர் பர்கூர் ரோட்டிலுள்ள 40 வயது ஆண் ஒருவரும் ஈரோடு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதேபோல், அந்தியூரில் உள்ள தனியார் ரத்த பரிசோனை மையத்தில் அந்தியூர் அடுத்துள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், 37,41 வயது ஆண்கள் மற்றும் ஐந்து வயது சிறுமி ஆகியோரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதையடுத்து, பரிசோதனை முடிவு வெளியான நிலையில், தூத்துக்குடியிலிருந்து வந்த 28 வயது பெண், இரண்டு வயது கைக் குழந்தைக்கு தொற்று இல்லை என உறுதியானது. மேலும், மற்ற ஆறு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்தனர்.
இந்நிலையில், வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களில், பர்கூர் ரோட்டில் வசிக்கும் 40 வயது நபரை தவிர, ஐந்து பேர் பவானி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை முடிந்து, பெருந்துறை அல்லது அந்தியூர் அருகேயுள்ள செம்புளிச்சாம்பாளையம் தனியார் பள்ளியில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறையினர் கூறினர்.
வைரஸால் பாதிக்ப்பட்டவர்களின் வீடு, அண்டை வீடு பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர். அந்தியூர் சித்த மருத்துவ மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர், வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் கபசுரக் குடிநீர் பொடி வழங்கி வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் ஆறு பேருக்கு அந்தியூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.