கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சி பொன்மலை பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்ட மலை இரயில் எஞ்சின், தற்போது புதுபிக்கப்பட்டு இன்று குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக மலை ரயில் சேவை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை குடைந்தும், ஆறுகளின் மீது பாலங்கள் அமைத்தும் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. இந்த பணி முடிவடைந்த பின்பு 1899 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி குன்னூர் – உதகை மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
ஆரம்ப காலக்கட்டத்தில் மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இரயில் சேவை தொடங்கப்பட்டது. இன்றும் நீலகிரியில் மலை இரயிலானது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் 5 பர்னஸ் ஆயில் என்ஜின் இயக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு என்ஜின் ஓராண்டுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலை பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த ரயில் எஞ்சின் புதுபிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் இன்று குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது. ரயில்வே துறையினர் ஒப்புதல் அளித்த பின்னர் விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட உள்ளது.
உதகை செய்தியாளர் செந்தில்