ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் புதிதாக துவக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, புதிய டாஸ்மாக் மதுபான கடை ஆரம்பிக்கப்பட்டது. புதிய மதுபானக்கடை யால் இப்பகுதியில் விபத்து ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும் என்று கூறி பொதுமக்கள் மதுபான கடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுகா செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், பிரம்மதேசம்,பிரம்தேசம் புதூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த டாஸ்மாக் தாசில்தார் குமார் அந்தியூர் வட்டாட்சியர் மாலதி ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி சப்-இன்ஸ்பெக்டர் வருணியா உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் திருபாலா