கடந்த இரு தினங்களுக்கு முன் மதுகரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சிமெண்ட் நிறுவன அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். புகை வெளிவருவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த சிமெண்ட் நிறுவனம் கூறியதன் அடிப்படையில் முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை குரும்பபாளையம் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி என்ற பெண்ணை யுவராஜ்,, கணேசன், ராஜாஜி ஆகிய மூன்று நபர்கள் வீட்டிற்குள் சென்று தகாத வார்த்தை பேசி அவரை தாக்கி உள்ளனர். அதில் காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரிசி பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த மூன்று நபர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுக்கரை காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையம் முன்பு திரண்ட பெண்கள் இந்த மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.