தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனோ தாக்கம் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதன் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது . மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது
அதன்படி பல ஆண்டுகளாக செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மாணவர்கள் அரியர் வைத்து இருந்த மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை, லாலி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு என்ற பெயரில் மாணவர்களின் மனித கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாநகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை பலர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.