ஈரோடு மாவட்ட எல்லையான சின்னப்பள்ளத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான போலீஸார் செக்போஸ்ட் திறப்பு
ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அம்மாபேட்டை மேட்டூர் மெயின் ரோட்டில் சின்னபள்ளம் பகுதியானது அமைந்துள்ளது. சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தினை இணைக்கும் பகுதியாக உள்ளதால் இரவு-பகல் என அனைத்து நேரங்களிலும் பெங்களூர், சென்னை, ஒசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் மேட்டூர் வழியாக வரும் அனைத்து வகை வாகனங்களும் ஈரோடு மாவட்ட எல்லையான சின்னப்பள்ளம் வழியாக தான் வர வேண்டும். இந்த பகுதியில் அம்மாபேட்டை போலீசார் மூலமாக போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் தினசரி மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பணியாற்றிய போலீசார் தங்க இடவசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், அவ்வழியில் காரில் சென்ற மேட்டூர் தொழிலதிபரான கே.ஆர். அன்.கோ., நிறுனவனத்தின் உரிமையாளர் மழை மற்றும் வெயில் காலங்களில் செக் போஸ்டில் பணிபுரியும் போலீசார் படும் இன்னல்களை கண்டு அவர்களுக்கு தங்குமிட வசதியுடன் கூடிய நவீன செக் போஸ்ட் அமைக்க முடிவு செய்து நல்ல வசதிகளுடன் ரூ. 2லட்சம் மதிப்பீட்டில் தானாக முன்வந்து புதியதாக செக்போஸ்ட் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த செக்போஸ்டினை 29-ம் தேதி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, பவானி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் குமரவேல், பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், முன்னாள் எம்.பி. கோவிந்தராஜர், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் செக் போஸ்டை அமைத்து கொடுத்த மேட்டூர் தொழிலதிபரை போலீசாருக்கு செய்திட்ட இந்த உதவியை பாராட்டி பேசினர்.