வரும் ஒன்றாம் தேதி மாவட்டத்திற்கு உள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் அரசு தனியார் பேருந்துகள் இயங்கும் எந்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 1019 அரசு பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு மண்டலங்களில் பொதுப்போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.
கோவை கோட்டத்தில் உள்ள கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின் மீண்டும் ஜூலை மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொது போக்குவரத்து சேவைகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனிடையே ஊரடங்கும் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டத்தில் இருந்து 1019 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் கோவை கோட்ட பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம் நடந்து வருகிறது என்றும், பெரும்பாலான பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இயக்க தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
மேலும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.