தென்காசி மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. இங்கு அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் ரஷியா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து கூழைக்கடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், டால்மிஷன் என்ற பெலிகன் வகை பறவைகள், பாம்புதாரா, பட்டை தலை வாத்து என சுமாா் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் இங்கு வந்து கூடுக் கட்டி இனப்பெருக்கம் செய்து தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன. இங்கு வரும் பறவைகளின் வசதிக்காகவும், மக்களின் பொழுது போக்கிற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் தென்காசி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் செந்தில்குமார் இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆய்வு செய்தார்.
இதில் தென்காசி அருகிலுள்ள சுந்தரபாண்டியபுரம் பெரியகுளம், மற்றும் செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளம் ஆகிய இரண்டு குளங்களை பார்வையிட்டுள்ளனர். இங்கு தேவையான நீர்வசதி, பறவைகள் வந்து தங்கி செல்ல மரங்கள் வளர்ப்பதற்கான இடப்பரப்பளவு போன்றவைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு குளங்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வந்து இரை தேடி செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்தால் இந்த பகுதி அனைத்தும் வளம் பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.