திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,வேம்பார்பட்டி, கோபால்பட்டி,சிலுவத்தூர் ,செந்துறை, மணக்காட்டூர், சிறுகுடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
அதன் பேரில் நத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேலுமணி, சிறப்பு- சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் காவல்நிலைய முன்பு சோதனை செய்ததில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம், போலீசார் விசாரணை செய்தனர்.
இதில், அவர்கள், வடமதுரை-அம்மாபட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 23),செந்துறை- களத்துப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 27) என்பதும், இருசக்கர வாகனங்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 இருசக்கர வாகனம், 2 ஸ்கூட்டி வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நத்தம் செய்தியாளர்: வசந்தசித்தார்த்தன்